
விஜிபி உலா அடுத்த நாளும் தொடர்ந்தது... காலை 9.30மணிக்கு ஆரம்பிச்சா சாயந்தரம் “அப்பா தேடுவாரே(திட்டுவாரே)ன்னு என் மண்டைக்கு உறைக்கற வரைக்கும் உட்கார்ந்து பேசிட்ட்ட்ட்டே இருப்போம்... விஜிபியில் அடிக்கடி பெங்காலி டூரிஸ்டுக்கள் ஹிப்ஹாப் வண்டிகளில் வந்திறங்குவது வழக்கம்... ஏன் நான் வட இந்தியர்கள் என்று சொல்லாமல் பெங்காலி என்று சொல்கிறேன்னு இந்த இடத்தில என்னை யாராச்சும் டவுட்டு கேக்கணும்.(யாரும் கேக்க மாட்டீங்களே...) சரி, நானே சொல்றேன்
வங்காளத்தில் திருமணம் செய்யும் பெண்ணின் கைகளில் சங்கு வளையலும் சில சிகப்பு கண்ணாடி வளையல்களும் அணிவிப்பார்கள். நாம் தாலி கட்டுவது போலத்தான் இதுவும். (ஜெனரல் நாலெட்ஜ்...) அவர்கள் கைகளை பார்த்தாலே வங்காளிகள் என்று தெரிந்துக்கொள்ளலாம். இப்படித்தான் நானும் அந்த டூரிஸ்டுகளை இனங்கண்டு ஜாக்கிடம் சொல்ல, அவரும் “அப்படியா?” என்று வாயத்தொறந்து கேட்டுக்கிட்டார்.
உட்கார்ந்து உட்கார்ந்து கால் வலிக்க ஆரம்பிச்சா, நாங்கள் எழுந்து போய் கடற்கரையில் நிற்பது வழக்கம்(முன் நாள்லயிருந்துதான்). அப்படி போகும் போது அங்கங்கே மணலில் கடை விரித்திருப்பார்கள். பொழுது போகாமலும், ஜாக்கு பர்ஸுக்கு வேட்டு வெக்கலாமா என யோசித்துக்கொண்டும் நான் கடையை ஆராய ஆரம்பித்தேன். ஜாக்கும் தலையெழுத்தேன்னு பார்த்திட்டு இருந்தார்.
அப்போது அங்கு வெண்மை நிறத்தில் சங்கு வளையல்கள் அழகாய் மின்னிக் கொண்டிருக்க, “இதை வாங்கிகோயேன்” என்றார். நாம என்ன வேணாம்னா சொல்ல போறோம்!! ’நாம வங்காளிகள் பத்தி சொன்னதை கேட்டு பயபுள்ள மனசுல என்னமோ நெனச்சிருக்கு பாரேன்’ என்று யோசித்தவாறே, சரி என்று தலையாட்டி வைத்தேன்.
உடனே அந்த வளையல்களை வாங்கி என் இரண்டு கைகளிலும் மாட்டி விட்டு, “இப்போ நமக்கு கல்யாணம் ஆயிடுச்சு, வங்காள முறையில்” என்று பெருமை மினுங்க சொன்னார் தலைவர். இப்போ நெனைக்க கொஞ்சம் காமெடியா இருக்குதான். ஆனா அப்போ எனக்கு சந்தோஷம் புரிபடலை... ஆனாலும் அடுத்த சீன் சோகம்தான். கல்யாணம் ஆன அன்னிக்கே நாங்க ரெண்டு பேரும் அழுதுட்டே சாயந்திரம் பிரிஞ்சி, அவர் ஃப்ரெண்டோட நைட் ஷோ சினிமாக்கும், நான் வீட்டுக்கும் போயிட்டோம். இப்படியாக முதல் கல்யாணம் முடிஞ்சுது. அழுகாச்சி சீனா இருந்தாலும் அதெல்லாம் சேர்ந்ததுதானே
”ஜில்லுன்னு ஒரு காதல்”