Friday, August 13, 2010

காதலிக்கு குட்டிப்பாப்பா கிப்டு...




இந்த மஞ்சள் முக அழகன் தன் மனதை சொல்லி ஜோராக நாங்கள் ஃபோனில் காதலிக்க தொடங்கி, சந்திப்பதற்கான ஏற்பாடுகள் நடந்தது... ஒரு வழியாக சென்னை மண்ணை மிதித்து, என்னை பார்க்க முதுகில் ஒரு துணி மூட்டையுடன் ஓடோடி வந்தார். சென்னையின் எல்லாக் காதலர்களை போலவே மெரினா எங்களையும் வரவேற்றது.

பீச்சில் ஒரு அடி தள்ளி உட்கார்ந்து ஜாக்கு காதல் பேசத் தொடங்கினார். சிறிது நேரம் கழித்து, "உனக்கு ஒரு பரிசு கொண்டு வந்திருக்கேனே! என்னன்னு சொல்லு பார்ப்போம்" என்று பெருமையில் முகம் பளபளக்க கேட்டார் தலைவர். "தெரியலியே! நீங்களே சொல்லுங்க" என்றேன் மனம் முழுக்க அனுமானங்கள் தோன்ற தொடங்கியிருந்தாலும் வெளிக்காட்டாமலே.
அப்போது முதுகில் இருந்த துணி மூட்டையை திறந்தார். ஒரு பெரிய பாலிதீன் கவரை வெளியே எடுத்தார். அதற்குள் இன்னொரு சின்ன கவர், அதனுள்ளே... அழகு கொஞ்சும் ஒரு குழந்தை...

என்னது முதல் சந்திப்பில் குழந்தையான்னு பதறாதீங்க... அச்சு அசலாக ஒரு குழந்தை பொம்மை இருந்ததாக்கும் அதனுள்ளே... ஃபோனில் அடிக்கடி எனக்கு குட்டி பாப்பான்னா ரொம்ப பிடிக்கும் என்று சொன்னதன் விளைவு புரிந்தது... நல்ல வேளை பக்கத்து வீட்டு குழந்தையை தூக்கிட்டு வராமல் விட்டானேன்னு சொல்றது காதுல விழுது...
ஆனா சும்மா சொல்லக் கூடாதுங்க... அந்த‌ குழந்தை பொம்மை, பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல கொள்ளை அழகாக இருந்தது... "உனக்குத்தான் குட்டி பாப்பான்னா பிடிக்கும் இல்லை. இது தான் நம்ம சோட்டூ (ஃபோனில் என் முதல் குழந்தைக்கு நான் வைக்க போவதாக சொன்ன செல்லப்பெயர்). நான் ஊருக்கு போயிட்டாலும் இவன் உன் கூட இருப்பான்" என்று சொன்னவர் முகத்தை திரும்பி பார்த்தால், அப்படி ஒரு பெருமை அந்த முகத்தில், என்னமோ நிஜமாகவே ஒரு குழந்தைக்கு அப்பா ஆகி விட்டதைப் போல. என் மடியில் வைத்திருந்த குழந்தையின் நெற்றியில் குனிந்து ஒரு முத்தம் வைத்து விட்டு ஆஸ்கார் புன்னகை வேறு... (ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா என்றெல்லாம் யாரும் முனக கூடாது...)
என்ன இருந்தாலும் இத்தனை அழகான முதல் பரிசு யாருக்கு கிடைக்கும்?? சொல்லுங்க...
அன்ன்னிக்கு றெக்கை கட்டி பறக்க ஆரம்பிச்சவ தான்... இன்னும் கீழே லேன்ட் ஆகலை. அந்த குழந்தை பொம்மையை வீட்டில கொண்டு வந்து வெச்சுட்டு நான் பண்ண அளப்பரி இருக்கே... யாரையும் தொடக்கூட விடலை. நானே ஒரு ஷாப்பிங்க் மாலில் வாங்கியதாக அப்பாவிடம் பொய் சொல்லியாச்சு! அக்கம் பக்கத்து வீட்டு வாண்டுகள் அல்லது சொந்தக்கார குட்டி சாத்தான்கள் அந்த பொம்மை வேண்டும் என்று கேட்டு அழ ஆரம்பித்து விட்டால் சமாதானப்படுத்தும் போதே, என் அப்பா "நீ என்ன குழந்தையா? அழறா இல்லை? கொடுத்துடு... வேற வாங்கிக்கலாம்" என்று ஆரம்பித்து விடுவார். எனித்து விடுவது போல் அவரை முறைத்து விட்டு, "நான் உனக்கு புதுசு வாங்கி தரேன் கண்ணா" என்று அந்த குழந்தைகளை தாஜா செய்து அனுப்ப நான் பட்ட பாடு ... எனக்குத்தான் தெரியும் அந்த கஷ்டம்.
சமைக்கும் போது, இதர வேலைகள் பார்க்கும் போது, தூங்கும் போது என்று எப்போதும் என்னுடனேயே அதை வைத்துக் கொண்டிருந்தேன். என் அப்பா லைட்டா ஸ்மெல் பண்ண ஆரம்பிக்கவும் தான் சுதாரித்துக் கொண்டு, அதை பத்திரமாய் பேக் செய்து பாங்க் லாக்கரில் வைக்கலாம் என்று நினைத்து கடைசிய்யா பீரோவில் பத்திரப்படுத்தினேன்...
இதெல்லாம் இருந்தாத்தானே,

"ஜில்லுன்னு ஒரு காதல்"

Thursday, July 1, 2010

ஜில்லு இப்போ உனக்கு தாண்டா!

கடலை நன்றாக வறுபடத்தொடங்கிய நேரம், கடலை வறுத்தெடுக்க மணல் போடும் விதமாக நான் செல்லப்பெயர், கொஞ்சல் மொழி என அம்மணிக்கு நாலாபுறமும் செக் வைக்கத் தொடங்கினேன்.

எல்லா ஃபிகரையும் போல சுதாரித்துக்கொண்டவள் "எங்கப்பா ஏற்கனவே முடிவு பண்ணிட்டார்,மாப்பிள்ளை ரெடி" என்றெல்லாம் சீன் போட தொடங்கினாள்.

நானோ கொஞ்சமும் அசராமல் "யாரந்த அதிர்ஷ்டசாலி" என கடலையில் கொஞ்சம் பனைவெல்லம் சேர்த்தேன். (நாம தான் ஸ்மெல் பண்ற டாக் மூஞ்சியைப் பார்த்தே கண்டுப்பிடிச்சுடுவோமே!!! )அதுவுமில்லாம அடுத்தவன் ஃபிகரை கரெக்ட் பண்றதுல இருக்கற ஆனந்தம் இருக்கே! அடடா! சொன்னாலும் புரியாது மண்ணாளும் வித்தை...

அடுத்த நாள் மாலை நான் வழக்கம் போல கால் செய்யாததால் வருத்தம் கொண்ட போண்டாக்கோழி(இந்த விஷயம் பாப்பாக்கு தெரிய வேணாம். ரொம்ப வருத்தப்படும்:( )குறுந்தகவல் மூலம் கொஞ்சினாள்;

அன்று என் மாமன் மகளின் பர்த்டே!(அட நாலாங்கிளாஸ் தாங்க படிக்குது) அதனால நான் என் மாமன் பொண்ணை பார்க்க போறதா குறுந்தகவல் அனுப்ப அம்மணி தன்னைத்தான் சொல்றதா கோக்குமாக்கா புரிஞ்சுக்கிட்டு, "சரி வாங்க மச்சான் சீக்கிரம்"னு மெசேஜ் அனுப்பிட்டா...(பாவம் கொஞ்சம் புத்திசுவாதீனம் இல்லையாக்கும்) அப்படிப்போடு அரிவாளை... அயிரை மீனு மாட்டுச்சுனு அந்த பக்கம் படகை திருப்பினா திடீர்னு நெளியறா... நழுவுறா.. படாத பாடு படுத்திட்டாப் போங்க.. கடைசியா மூணு மணி நேரம் முக்கல் முனகலுக்கு பிறகு முத்தத்துடன் முற்றுப்புள்ளி வெச்சேன் பஞ்சாயத்துக்கு(அட ஃபோன்ல தாங்க‌...) அப்போத்தான் ஆரம்பிச்சுது,


"ஜில்லுன்னு ஒரு காதல்"

Friday, June 18, 2010

ஆன்லைன் காதல் - போட்டோஷாப் ஜாக்கிரதை!


போன்ல தொடங்கற ஆண் நட்புக்களிடம் எப்பவுமே எனக்கு பயம் கொஞ்சம் அதிகம். முகம் பார்க்காம பேச ஆரம்பிக்கறதால, ஈர்ப்பு கொஞ்சம் எக்ஸ்ட்ராவாகவே இருக்கும். அதனால முதல்ல நட்புனு ஆரம்பிச்சு, கடலை வறுத்துக்கொண்டே காதலுக்கு போய் விடலாம் இத்தகைய உறவுகள். அதுவும் நம்ம ஜாக்கு கிட்ட முதல் நாள் பேசினதுலயே கொஞ்சம் பயம் வந்துருச்சு. சரி பார்க்காம பேசினாத்தானே இந்த பிரச்சினையெல்லாம், ஒரு போட்டோ மெயில்ல அனுப்பிட்டா??? இப்படி ஒரு கெரகம் பிடிச்ச யோசனை எனக்கு எப்படி வந்தது என்றே தெரியலை.

பையன் சில கொக்கி கேள்விகள் போடும் போதே நான் ரொம்ப புத்திசாலித்தனமா "சரி என் போட்டோ அனுப்பறேன். பாருங்க. ஆனா பார்த்துட்டு உடனே டெலிட் பண்ணிட‌ணும்"னு நிபந்தனைகளோடு நம்ம்ம்பி என் புகைப்படத்தை அனுப்பினேன். அந்த நாள்... என் வாழ்க்கையை இப்படி தலைகீழா திருப்பி போட்டுடுச்சு... பையன் அடுத்த நாள்ல இருந்து தான் இன்னும் அதிகமா கடலை வறுக்க ஆரம்பிச்சான். ஆனா போட்டோவை பத்தி மூச்... வாயே திறக்கலை. எனக்கு என்ன காரணம்னு தெரியவே இல்லை. நான் எப்படி இருந்தேன்னு கேக்கறதுக்கும் அவமானமா இருந்துச்சு. அப்புறம் பிற்காலத்துல தான் புரிஞ்சுது... இவன் ஒரு ப்ளானோடதான் சுத்திட்டு இருந்திருக்கான். இப்படி என்னை கொஞ்சம் கொஞ்சமா என்னை டீல்ல விட்டு மொத்தமா பிடிச்சுட்டான்.

நம்ம ஜாக்கு இலக்கிய சேவை செஞ்சுக்கிட்டு இருக்கற அவரோட ப்ளாக்ல தலைவரோட க்ளோஸப் போட்டோ ஒண்ணு தொங்க விட்டிருப்பார். அதுல சும்மா சொல்ல கூடாதுங்க... அத்தனை மொழுமொழுன்னு ஒரு ஸைடு போஸ்ல‌ அழகாக இருப்பான். சரி இத்தனை அழகா இருக்கற பையன் நம்ம போட்டோவை பார்த்து மயங்க மாட்டான் அப்படின்னு மறுபடியும் நம்ம்ம்பி நான் பெரிசாக‌ இவன் கடலையை கண்டுக்கலை. இருந்தாலும் இவரை இன்னும் ஸ்ட்ரெய்ட் போஸ்ல பார்க்கலையேன்னு அப்ப்டி ஏதாவது போட்டோ அனுப்புங்கன்னு கேட்க சரி அனுப்பறேஎன்னு சொன்னவர் ரெண்டு வாரம் கழிச்சு தான் அனுப்பினார். அப்போத்தான் புரிஞ்சுது போட்டோ ஷாப்ல இவர் என்னென்ன தில்லாலங்கடி வேலைல்லாம் பண்ணியிருக்கார்னு புரிஞ்சுது. அந்த ப்ளாக்ல இவர் அப்ப்டி எம்.ஜி.ஆர் மாதிரி தகதகன்னு தங்க கலர்ல மின்னிட்டு இருப்பார்.ஆனா உண்மைல பையன் கருப்புதான். இதை படிக்கும்போது வேணா கோபத்துல அவர் முகம் கொஞ்சம் சிவந்திருக்கும்... ஹ்ம்ம்ம் இனி என்ன பண்றது? அதுக்கப்புறம் "கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு" என்னோட காலர் ட்யூனாயிடுச்சு. அப்புறம் என்ன?


"ஜில்லுன்னு ஒரு காதல்" தான்....

Monday, June 14, 2010

முன் தினம் பார்த்தேனே! ஹம்மிங்ஸ் ஆஃப் இண்டியா!


கடலை வறுக்க ஆரம்பிப்பதற்கு முன்பு வரை அம்மணியை ஒரு 28 இல்லை 30 வயது ஆன்ட்டி என்று தான் கற்பனை செய்து வைத்திருந்தேன். காரணம் என்ன என்பது நாளது வரை விளங்கவில்லை. மேலும் நமக்கு ஆதி காலம் முதலே கொஞ்சம் 'ஆன்ட்டிமேனியா' வேறு. அது ஆன்ட்டி இல்லை அம்மணி தான் என்று ஊர்ஜிதமான போது என் கன்பாயின்ட்டில் டார்கெட் ஃபிக்ஸ் ஆனது.அந்த இடத்தில் என் நிலை குறித்து உவமை சொல்ல பழமொழியேதும் கிடைக்கவில்லை. உங்களில் யாரேனும் உதவக்கூடுமெனில் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்.என் திருமுகத்தை வெளியிடுவதில் எனக்கு யாதொரு அசெளகரியமும் இல்லையாதலால் என் பிளாக்கிலேயே க்ளோஸப் புகைப்படம் இணைக்கப்பட்டிருக்கும். ஆனால் அம்மணியை நான் நேரில் பார்த்திராதபடியால் சில பல கொக்கி கேள்விகளை போட்டு இரண்டொரு நாளில் மின்னஞ்சலில் புகைப்படம் அனுப்பி வைக்க செய்தேன். நமக்கு காதல் கோட்டை அஜீத் அளவுக்கு ரிஸ்க் எடுக்க உடம்பிலயும் மனசிலேயும் தெம்பில்லை.
ச‌ரி விஷ‌ய‌த்துக்கு வ‌ருவோம். ஆஃபீஸ் க‌ம்ப்யூட்ட‌ரில் அந்த‌ மெயிலை ஓப்ப‌ன் செய்து க‌ண்க‌ளும் வாயும் விரிய‌ ஜொள்ளு வ‌ழிய‌ பார்த்திருக்கும் நேர‌ம் ஆஃபீஸ்பியூனும் பின்னாலிருந்து பார்த்து "யாரு சார் அந்த‌ ஃபிக‌ர்?' என்று ம‌ன‌சாட்சியில்லாம‌ல் கேட்க‌, டீயும் ஃபில்ட‌ரும் வாங்கி த‌ந்து அவ‌ன் வாய‌டைத்த‌து த‌னிக்க‌தை.புகைப்ப‌ட‌த்தை பார்த்த‌ பின்னும் ந‌ம்மிட‌மிருந்து எந்த‌ ரியாக்ஷ‌னும் இல்லாத‌தால் க‌டுப்பான‌ அம்ம‌ணி எப்ப‌டி கேக்க‌றதுன்னே தெரியாம‌ க‌ண்ட‌ப‌டி பினாத்திக் கொண்டிருந்த‌ போது ந‌‌ம‌க்கோ ப‌ய‌ங்க‌ர‌ குஜால். அத‌ற்கு பிறகு "ப‌ப்லு(அம்ம‌ணியின் செல்ல‌ப்பெய‌ராமாம்!!) நீ ஃபோட்டோல‌ எல்லாம் அவ்ளோ ந‌ல்லா இருக்க‌றதேயில்லைடி"னு இவ‌ ஃப்ரென்ட்ஸ் சொல்லுவாங்க‌னு இவ‌ளே சொன்னா. (அதாவ‌து நேர்ல‌ இவ‌ங்க‌ சுஷ்மிதா சென்னுக்கு சுடிதார் போட்டு விட்டா மாதிரியே இருப்பாங்க‌ளாம்)ஆனால் அப்போ சொன்ன‌துக்கு ஒண்ணுமே சொல்லாம‌ 'ச‌ரி போ'னு விட்டுட்டேன். (பின்னே!இன்னும் க‌ரெக்ட் ப‌ண்ண‌லை இல்ல‌!)
நாம‌ போட்ட‌ க‌ட‌லையில‌ அம்ம‌ணி ம‌ன‌சில ந‌ம்ம‌ இமேஜ் ஜிவ்வுன்னு ஏறிடுச்சு(வோட‌ஃபோன் பில் நான்கு இல‌க்க‌ங்க‌ளில் ஏறிடுச்சு. உஸ்ஸ்ஸ் அப்பா... ஒரு ஃபிக‌ர் க‌ரெக்ட் ப‌ண்ண‌ எம்புட்டு க‌ஷ்ட்ட‌ப்ப‌ட‌ வேண்டியிருக்கு!!) ப‌ல‌ த‌ருண‌ங்க‌ளில் தூண்டில் கேள்விக‌ளில் ந‌ழுவியோடிய‌ அம்ம‌ணி ஒரு நாள் தானாக‌வே கொதிக்க‌ற ம‌சாலாவில் குபீர்னு குதிச்சுட்டாங்க‌... அந்த‌ எபிஸோடு நெக்ஸ்ட்டு. இது அவ‌ங்க‌ப்பா கிள‌ம்ப‌ற‌ நேர‌ம். ஒரு ரெண்டு ம‌ணிநேரமாவது காத‌ல் ப‌ண்ண‌னும். ம்ம்ம் என்ன‌டா காத‌ல்னு கேக்க‌றீங்க‌ளா? (நீங்க‌ கேக்க‌லனாலும் நாங்க‌ இத‌சொல்லித்தான் போஸ்ட்ட‌ முடிப்போம்)
அதாங்க‌

"ஜில்லுன்னு ஒரு காத‌ல்"

Thursday, June 10, 2010

ஒரு நாயகன் உதயமாகிறான் -ஜில்லுனு ஒரு காத‌ல்


மக்களே... தலைவரோட ப்ளாக் பார்த்தீங்கன்னா படிப்பார் எவருமின்றி பாவமாக இருந்தது. ஆனால் கவிதைகள் ஒவ்வொன்றும் சும்மா சொல்லக்கூடாது,அத்தனை அழகாய் இருக்கும். அப்ப்டி ஒரு சொல் நயம் பொருள் நயத்தோட புலவர் பின்னியிருப்பார். நமக்கு வேற கவிதையே எழுத வராதா... அப்படியே எழுதினாலும் எல்லோரும் "ஏம்மா உனக்கு இந்த வேலை"னு பின்னூட்டத்தில் கலாய்ப்பாங்க... அதனால நல்ல கவிதைகளை பார்க்கவே சந்தோஷமா இருந்துச்சு. சரி, இவ்வளவு அருமையான கவிதைகள் அனாதையாய் இருக்கின்றனவே என்று பரிதாபப்பட்டு, எல்லோரையும் போல கமென்ட் போடற‌தோட நிற்காமல் "உங்கள் வலைப்பக்கத்தை தமிழ்மணம் திரட்டி போன்றவற்றில் ஏன் இணைக்கவில்லை"னு கேட்டு, 'சரி இவருக்கு அதெல்லாம் தெரியாது போல இருக்கு'னு நெனச்சு என் மெயில் ஐடி கொடுத்தேங்க... கொடுத்ததும் பதிலுக்கு மெயில் ஐடி கொடுக்க வேண்டியததுதானே... உடனே செல்போன் நம்பர்தான் பதிலா வந்தது.

ரொம்பவும் யோசிச்சு சரி ஒரு உதவி தானே போனா போகுதுனு "ஹாய் திஸ் இஸ் ...."னு ஒரு மெசேஜ் அனுப்பினேன்.(அன்னிக்கு நான் வேற ஆஃபீஸ்க்கு லீவு போட்டுட்டு வீட்ல வெட்டியா உக்காந்துட்டு இருந்தேன்.பொழுது போகல. அதுவும் ஒரு காரணம்). நம்ம ஜாக்கு ஆஃபீஸ்ல பயங்கர பிஸி. உடனே கால் பண்ணிட்டார். அப்புறமென்ன? அப்பவே ரெண்டு பேரும் சேர்ந்து அவ‌ரோட‌ வ‌லைப்ப‌க்க‌த்தை திர‌ட்டி மாதிரியான‌ வ‌லைப்ப‌க்க‌ங்க‌ளில் இணைச்சுட்டோம்.

அதுக்க‌ப்புறமும் த‌லைவ‌ர் அட‌ங்க‌‌வே இல்லை. டெம்ப்ளேட் மாத்த‌லாமா, எப்ப‌டி மாத்த‌ற‌து, எந்த‌ டெம்ப்ளேட் ந‌ல்லா இருக்கும், பாலோய‌ர்ஸ் விட்ஜெட் வ‌ர‌லையே என்ன‌ ப‌ண்றது, இன்னிக்கு ஒரு போஸ்ட் போட்டேன் அதை எப்ப‌டி த‌மிழ் ம‌ண‌த்தில் அப்டேட் ப‌ண்றது, உங்க ப்ளாக் ஃபுல்லா ப‌டிச்சேங்க‌, அந்த‌ க‌தை சூப்ப்ப‌ர்ர், இன்னிக்கு நீங்க என்ன சாப்ப்டீங்க‌, ஆஃபீஸ்க்கு டெய்லி ப‌ஸ்லியா போறீங்க‌ கூட்ட‌மா இருக்குமே அதுவும் சென்னைல‌, நீங்க எந்த காலேஜ், நான் காலேஜ்ல ரொம்ப வால்பைய‌னாக்கும் அப்ப‌டி இப்ப‌டினு க‌ட‌லைய‌ வ‌றுத்து வ‌றுத்து வாயில் போட்டுக்கொண்டிருந்தார்.
ந‌டுவில் அவங்க சித்தி வீட்டுக்கு போய் அங்க இருக்கிற குட்டீஸ் கூட பேச‌ விட்டு இம்ப்ரெஸ் ப‌ண்ணுவார். ஃப்ரென்ட்ஸையெல்லாம் கண்டுக்கவே கண்டுக்காம நீ மட்டும் தான் எனக்கு முக்கியம் அப்படிங்கற மாதிரி பேசுவார்.(இதே ஜாக்கு பின்னொரு நாள் எங்கள் கடற்கரை சந்திப்பில் தூரத்தில் ஒரு நண்பனை பார்த்து விட்டு, அந்த நண்பனே இவரை கண்டுக்கொள்ளாத போதும், என்னை அலையில் தனியாக நிறுத்தி விட்டு(:(), "டேய் டேய்... நண்பா"னு, கத்திகிட்டே அவன் பின்னாடி ஓடி கைகுலுக்கிட்டு தான் திரும்பி வந்தார். இந்த கதையை நான் இன்னொரு நாள் விலாவாரியாக சொல்றேன்).

இப்போ உங்க யாருக்காவ‌து க‌ட‌லை வ‌றுப்ப‌து எப்ப‌டிங்க‌ற த‌லைப்பில் ஏதாவ‌து சந்தேக‌ம் இருந்தால் ஜாக்கை கேட்க‌லாம். த‌லைவ‌ர் அதுல‌ பி.ஹெச்.டி. போனை கையில எடுத்தார்னா ஒண்ணு அவர் மொபைல் பேட்டரி லோனு ஸ்விட்ச் ஆஃப் ஆகணும், இல்லைனா என்னோடது ஸ்விட்ச் ஆஃப் ஆகணும். அப்படி இல்லைனா என் அப்பா கால் வெயிட்டிங்க்ல இருந்து நானே இவர் call-ஐ கட் பண்ணனும். அது வரைக்கும் செல்போனை காதிலிருந்து ஒரு இன்ச் நகர்த்த மாட்டார். இப்ப‌டி மணிக்கணக்கில் அவ‌ர் பேச நான் கேட்க, நான் பேச அவ‌ர் கேட்க... அவரோட‌ வோடஃபோன் போஸ்ட்பெயிட்டில் பில்லு ஏற... அப்புற‌மென்ன "ஜில்லுனு ஒரு காத‌ல்தான்"

Wednesday, June 9, 2010

கட் பண்ணி ஓப்பன் பண்ணினா,,,,,ஜில்லுனு ஒரு காதல்

கட் பண்ணி ஓப்பன் பண்ணினா,,,,,ஜில்லுனு ஒரு காதல்
கட் பண்ணி ஓப்பன் பண்ணினா,,,,, ஒரு அழகான கிராமம்.எங்கே திரும்பினாலும் பச்சை வயல்கள்.சிறுவானி ஆறு சிலுசிலுனு ஓடும்.ஆத்தங்கரைல பொண்னுங்க எல்லாம் குளு குளுனு விளையாடும்.பழைய ஹைஸ்கூல்,அதுக்கு பின்னாடி போஸ்ட் ஆபீஸ்,அதுக்கு பின்னாடி நாட்டாமை வீடு,அந்த நாட்டாமைக்கு ஒரு அழகான பொண்னு,,,,,,



மேலே சொன்ன கிராமத்துக்கும் நமக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது.(!)நமக்கு கோயம்புத்தூர்....

ஆபீஸ் போனோமா, ஆனந்த விகடன் படிச்சமானு இல்லாம நெட்டுல கொஞ்சம் மேய ஆரம்பிச்சேன்...அப்ப ஒருநாள் வலையுலகைப் பத்தி கலைதாகத்துடன் சிந்தித்துக்கொண்டே அமர்ந்திருந்த பொழுது, அதில் ஒரு மிகப்பெரிய ஓட்டை இருப்பது தெரிய வந்தது( எதுல? அப்படின்னு இன்டீசன்டா கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது.) அந்த இடத்தை FILL பண்ணதான் நான் கவிதையே உலகமா ஒரு ப்ளாக் ஆரம்பிச்சேன்.( தமிழ்நாட்லதான் பஸ்ல உக்காந்துட்டு பராக் பாக்கறவன் எல்லாத்துக்கும் கவித வருமே! அது மட்டும் இல்லாம கல்வீச்சு,சோடாபாட்டில் வீச்சு, முட்டை அடி, கண்டன பேரணி,உருவபொம்மை எரிப்பு போன்ற எந்த VIOLENCE ம் இல்லாம நம்ம இஷ்டப்படி கிறுக்க இதுதான் நல்ல இடம்னு தோணியதால கமிட் ஆயிட்டேன்...





அப்பறம் பத்து கவித (!) எழுதினதுக்கப்பறம் எப்படியோ மோப்பம் பிடிச்சு நம்ம ப்ளாக்குக்கு வந்தாங்க MISS ஜில்லு
நம்ம எழுத்தில மயங்கி (!!!!) ஏதேதோ கமெண்ட்லாம் போட்டாங்க...நாமளும் காட்டுப்பூனை கருவாட்டு பொட்டலத்த பார்த்த மாதிரி அம்மணியோட முகவரிக்குப் போய் "அட்டாக்" குடுத்தோம்.
சும்மா சொல்லக் கூடாதுங்க கத,கவித,விமர்சனம் பயணக்குறிப்பு,சுயசரிதைனு கேக்க ஆளில்லாததால இவ இஷ்டத்துக்கு விளையாடியிருக்கா!போனமா வந்தமானு இல்லாம நானும் வாய்க்கு வந்ததை எழுதி வைக்க பத்திகிச்சு! நெருப்பு...அப்பறம் என்ன? நான் எழுத அவ படிக்க!, அவ எழுத நான் படிக்க!(சரி மேட்டருக்கு வரேன்!)


ஒன் டே அம்மணியோட கருத்துரைய மதிப்பீடு செய்யலாம்னு ஓப்பன் பண்ணி பார்த்தா, ஒரு கேள்வி கேட்டிருந்தாங்க, "ஏன் நீங்க திரட்டி, தமிழ்மணம்ல எல்லாம் உங்க ப்ளாக்க இணைக்கல?(நமக்குதான் விளம்பரமே பிடிக்காதே!) ஏதாவது உதவி தேவைனா கேளுங்கனு ஹெல்ப்லைன் ஈமெயில் ஐடி வேற!!! இதுல ஏதோ உள்குத்து இருக்குங்கறத கூட புரிஞ்சிக்க முடியாம ரொம்ப அப்பாவியா நானும் என்னோட மொபைல் நம்பர அவளுக்கு நம்பி அனுப்பி வெச்சேன்......




அடுத்த அஞ்சாவது நிமிஷம் "ஹாய்"னு ஒரு மெசேஜ்.
அப்பறம் என்ன "ஜில்லுனு ஒரு காதல்"

Monday, June 7, 2010

ஜில்லுனு ஒரு காதல் - தலைவி கூற்று அறிமுகம்


நண்பர்களே...நான் ஜில்லு... இந்த ஜாக்கு சொல்லுறதை எல்லாம் அப்படியே நம்ப வேண்டாம். ஜோ மட்டுமில்ல எந்த பொண்ணை பார்த்தாலும் பட்டிகாட்டான் மிட்டாய் கடையை முறைக்கற மாதிரி ஜொள்ள வேண்டியது... முதல்முதல்ல நாங்க சந்திச்ச போது கூட அப்படித்தான் முறைச்சுக்கிட்டு இருந்தான். நாங்களாவது ஏதோ குட்டி 'சோதிகா'னு தான் நெனச்சுக்கிட்டு இருக்கோம். ஆனா இவருக்கு மனசுல பெரிய டாம் க்ரூஸ்னு நெனப்பு...(மொத்தத்திலே ரெண்டு பேருமே ஒரு மார்க்கமாத்தான் சுத்தறீங்களா... கஷ்ட காலம்னு புலம்பறீங்களா... ரிலாக்ஸ் ரிலாக்ஸ்... கண்டுக்காதீங்க). சட்டைல ஒவ்வொரு பக்கமும் நாலு நாலு பாக்கெட்.சரி சட்டை தான் இப்படினா பேன்ட்ல நாலு கயிறு அங்கங்க தொங்கும்... கேட்டா ஃபேஷனாமாம். என்னமோ ரொம்ப ஸ்டைல் பண்றதா நெனச்சு விரலை விதவிதமா வித்தை காட்டிட்டு முகத்தில ஒரு பெருமிதத்தோட ஒரு லுக்கு விடுவான் பாருங்க... ம்ம்ம்ம்... சரி ஒழிஞ்சு போகட்டும். அப்புறம் அதென்ன இவ்ளோ ஓட்டிட்டு பப்பி, புஜ்ஜினு கொஞ்சுறது...கேடி... ம்ம்ம் இந்த மாதிரி ஜாக்குகள் கிட்ட கொஞ்சம் கேர்ஃபுல்லாதான் இருக்கணும். ஆனாலும் நம்ம ஜாக்கை எவ்ளோ வேணா ஓட்டலாங்க... கடைசியா என்னங்கனு கொஞ்சமே கொஞ்சம் கொஞ்சினா போதும். பையன் ஃப்ளாட்... ம்ம்ம் இப்படித்தான் வாழ்க்கை போகுது..........

Thursday, May 27, 2010

ஹீரோ என்ட்ரி ...



ரசிகர்களே (!),

ரசிகைகளே(!!!!!)

நான்தாங்க அந்த ஜாக்கு!

மேலே சொன்ன அந்த ரெண்டு வார்த்தைகளும் சத்தியமா உங்கள கடுப்பேத்த இல்லைங்க ....

இந்த அம்மணி பண்ற அளப்பரி தாங்க முடியாம தான் ...

இந்த பிரச்சனைய நாம அப்பறம் டீல் பண்ணலாம்....ஏற்கனவே நாங்க ரெண்டு பேரும் பிளாக்கர் ல "இலக்கிய சேவை"! செய்துட்டு இருக்கறதால இப்போ லவ்வுக்குனு ஒரு தனி சேனல் !! ஆரம்பிச்சு இருக்கோம் ...அதை தவிர இந்த சூர்யா ,ஜோதிகா ஸ்டில்'கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கெடயாது.... என்பதை அழுத்தமாகவும் , ஆணித்தரமாகவும் இந்த இடத்தில் சொல்லிக்கொள்ள கடமைப் பட்டுள்ளேன் ...சூர்யா நம்ம ஊருக்காரர் அதனால அவர விடுங்க ....

இந்த jilla கரெக்ட் பண்ண ஆரம்பிச்ச புதுசுல எனக்கும் ஜோதிகாவை பிடிக்கும்னு ஒரு வார்த்தை சொல்லிட்டேனா ( சும்மா பிட்டு தான்! )நம்ம ஆளுக்கு வேற அடி மனசுல குட்டி(!) சோதிகா அப்பிடின்னு ஒரு நெனப்பு ....அதுல இருந்து அம்மணிக்கு எப்போ பாத்தாலும் "ஒரு ஊரில் அழகே உருவாய்"ஹம்மிங் கேக்க ஆரம்பிச்சுடுது......சரி .... இவ மரியா ஷரபோவா போட்டோ கூட போடட்டும் .....என்னையும் இந்த கூத்துல கோர்த்து விட்டு அராஜகம் பண்றா ...காதலிகளின் அட்டகாசங்களை வெகுஜன வெளிச்சத்திற்கு கொண்டு வர விரும்பும் காதலர்கள் என்னோடு கைகோர்க்கலாம் ( காதலிகள் கூட !)பயப்படாதிங்க ... ஓட்டற வரைக்கும் ஓட்டிட்டு பின்னாடி புஜ்ஜி பப்பினு ஏதாவது சொல்லி சமாளிச்சிடலாம் ... ஐயோ ! போன் பண்றா ......பேசி முடிக்க விடிஞ்சுடும் ... இப்போதைக்கு அப்பீட்டு .....

Wednesday, May 26, 2010

ஜில்லுனு ஒரு காதல் அறிமுகம்


ஹல்லோ வலைப்பதிவர்களே... இதோ உங்களுக்காக ஒரு சுவாரஸ்யமான வலைப்பூ... நாங்கள் ஜாக் அன்ட் ஜில்(அதாவது ஜாக்கு மற்றும் ஜில்லு... ஹி ஹி மொழிபெயர்ப்பு). எங்கள் அதிரடியான சாகசங்கள் நிறைந்த காதல் கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்றிருக்கிறோம். இருக்கிற மொக்கைகள் போதாதுனு நீங்க வேறயானு ஏதோ முணுமுணுக்கற மாதிரி இருக்கும்... அது சரி. ஆனா எவ்வ்வ்வளவோ படிச்சுட்டீங்க இதையும் படிக்க மாட்டீங்களானு ஒரு அபரிமிதமான அல்லது அல்பத்தனமான நம்பிக்கையில் இதை ஆரம்பிச்சுட்டோம். இனி உங்கள் பேராதரவை மட்டுமே நம்பி,,, ஜாக்கு
மற்றும்
ஜில்லு....
பி. கு : இதுக்கு எதுக்கு சூர்யா ஜோதிகா ஸ்டில்லுனு கடுப்பா இருக்கா? எல்லாம் ஒரு பெயர் பொருத்ததுக்கும் விளம்பரத்துக்கும் தான்.அதுவுமில்லாம அம்மணி ஆசப்பட்டுச்சேனு... விடுங்க‌ விடுங்க... கண்டுக்காதிங்க‌