இந்த மஞ்சள் முக அழகன் தன் மனதை சொல்லி ஜோராக நாங்கள் ஃபோனில் காதலிக்க தொடங்கி, சந்திப்பதற்கான ஏற்பாடுகள் நடந்தது... ஒரு வழியாக சென்னை மண்ணை மிதித்து, என்னை பார்க்க முதுகில் ஒரு துணி மூட்டையுடன் ஓடோடி வந்தார். சென்னையின் எல்லாக் காதலர்களை போலவே மெரினா எங்களையும் வரவேற்றது.
பீச்சில் ஒரு அடி தள்ளி உட்கார்ந்து ஜாக்கு காதல் பேசத் தொடங்கினார். சிறிது நேரம் கழித்து, "உனக்கு ஒரு பரிசு கொண்டு வந்திருக்கேனே! என்னன்னு சொல்லு பார்ப்போம்" என்று பெருமையில் முகம் பளபளக்க கேட்டார் தலைவர். "தெரியலியே! நீங்களே சொல்லுங்க" என்றேன் மனம் முழுக்க அனுமானங்கள் தோன்ற தொடங்கியிருந்தாலும் வெளிக்காட்டாமலே.
அப்போது முதுகில் இருந்த துணி மூட்டையை திறந்தார். ஒரு பெரிய பாலிதீன் கவரை வெளியே எடுத்தார். அதற்குள் இன்னொரு சின்ன கவர், அதனுள்ளே... அழகு கொஞ்சும் ஒரு குழந்தை...
என்னது முதல் சந்திப்பில் குழந்தையான்னு பதறாதீங்க... அச்சு அசலாக ஒரு குழந்தை பொம்மை இருந்ததாக்கும் அதனுள்ளே... ஃபோனில் அடிக்கடி எனக்கு குட்டி பாப்பான்னா ரொம்ப பிடிக்கும் என்று சொன்னதன் விளைவு புரிந்தது... நல்ல வேளை பக்கத்து வீட்டு குழந்தையை தூக்கிட்டு வராமல் விட்டானேன்னு சொல்றது காதுல விழுது...
ஆனா சும்மா சொல்லக் கூடாதுங்க... அந்த குழந்தை பொம்மை, பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல கொள்ளை அழகாக இருந்தது... "உனக்குத்தான் குட்டி பாப்பான்னா பிடிக்கும் இல்லை. இது தான் நம்ம சோட்டூ (ஃபோனில் என் முதல் குழந்தைக்கு நான் வைக்க போவதாக சொன்ன செல்லப்பெயர்). நான் ஊருக்கு போயிட்டாலும் இவன் உன் கூட இருப்பான்" என்று சொன்னவர் முகத்தை திரும்பி பார்த்தால், அப்படி ஒரு பெருமை அந்த முகத்தில், என்னமோ நிஜமாகவே ஒரு குழந்தைக்கு அப்பா ஆகி விட்டதைப் போல. என் மடியில் வைத்திருந்த குழந்தையின் நெற்றியில் குனிந்து ஒரு முத்தம் வைத்து விட்டு ஆஸ்கார் புன்னகை வேறு... (ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா என்றெல்லாம் யாரும் முனக கூடாது...)
என்ன இருந்தாலும் இத்தனை அழகான முதல் பரிசு யாருக்கு கிடைக்கும்?? சொல்லுங்க...
அன்ன்னிக்கு றெக்கை கட்டி பறக்க ஆரம்பிச்சவ தான்... இன்னும் கீழே லேன்ட் ஆகலை. அந்த குழந்தை பொம்மையை வீட்டில கொண்டு வந்து வெச்சுட்டு நான் பண்ண அளப்பரி இருக்கே... யாரையும் தொடக்கூட விடலை. நானே ஒரு ஷாப்பிங்க் மாலில் வாங்கியதாக அப்பாவிடம் பொய் சொல்லியாச்சு! அக்கம் பக்கத்து வீட்டு வாண்டுகள் அல்லது சொந்தக்கார குட்டி சாத்தான்கள் அந்த பொம்மை வேண்டும் என்று கேட்டு அழ ஆரம்பித்து விட்டால் சமாதானப்படுத்தும் போதே, என் அப்பா "நீ என்ன குழந்தையா? அழறா இல்லை? கொடுத்துடு... வேற வாங்கிக்கலாம்" என்று ஆரம்பித்து விடுவார். எனித்து விடுவது போல் அவரை முறைத்து விட்டு, "நான் உனக்கு புதுசு வாங்கி தரேன் கண்ணா" என்று அந்த குழந்தைகளை தாஜா செய்து அனுப்ப நான் பட்ட பாடு ... எனக்குத்தான் தெரியும் அந்த கஷ்டம்.
சமைக்கும் போது, இதர வேலைகள் பார்க்கும் போது, தூங்கும் போது என்று எப்போதும் என்னுடனேயே அதை வைத்துக் கொண்டிருந்தேன். என் அப்பா லைட்டா ஸ்மெல் பண்ண ஆரம்பிக்கவும் தான் சுதாரித்துக் கொண்டு, அதை பத்திரமாய் பேக் செய்து பாங்க் லாக்கரில் வைக்கலாம் என்று நினைத்து கடைசிய்யா பீரோவில் பத்திரப்படுத்தினேன்...
இதெல்லாம் இருந்தாத்தானே,
"ஜில்லுன்னு ஒரு காதல்"